Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/29/2012

ஷின் நியான் குவாய்ல

உலகம்
ஷின் நியான் குவாய்ல!
Posted Date : 17:01 (23/01/2012)Last updated : 15:01 (24/01/2012)
- சுபஸ்ரீ மோகன்

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்... அது, வசந்த காலம். ஆனால், சீன மக்களுக்கோ கசந்த காலம். 'நியான்' என்ற ஒரு காட்டு விலங்கு சீனாவில் ஒரு கிராமத்தின் மக்களை தினமும் இரவு நேரத்தில் தாக்கியது என்பது பழைய மரபுக்கதை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்றும் தானியங்களையும் தின்று தீர்த்த அந்த விலங்கு, சின்னஞ்சிறு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், இரவு என்றாலே பயம் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தக் கொடுமையில் இருந்து தப்ப, ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள், சிறு குழந்தை அணிந்திருந்த சிவப்பு உடையையும், எங்கோ எரிந்துகொண்டிருந்த நெருப்பையும் கண்டு, நியான் பயந்து ஓடியதை மக்கள் பார்த்தனர்.

நியானின் கொடுமைகளில் இருந்து தப்ப, சிவப்பு நிற உடைகளையும், நெருப்பையும் காட்டி அதை விரட்டினர்!
பின்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த கால தொடக்கத்திலும், சீன மக்கள் தங்கள் வீடுகளின் முன், சிவப்பு நிற கூண்டு விளக்குகளை வைத்து, சிவப்பு உடைகளையும் அணிய தொடங்கினர்.
இந்த கலாசாரம் தான், இன்றும் வசந்த கால பண்டிகையாகவும், வருட பிறப்பாகவும், கொண்டாடப்படுகிறது!

சீன புத்தாண்டு... ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்படி 12 விலங்குகளின் பெயரில் ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டின் பெயர் 'டிராகன்'.

சீன வருட பிறப்பை, இந்த ஆண்டு இன்று (ஜனவரி 23) தொடங்கி ஜனவரி 25 வரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வீதி எங்கும் சிவப்பு வண்ண கூண்டு விளக்குகளின் அணிவரிசை, தோரணங்களின் அலங்காரம்!

சிவப்பு மலர்களையும், சிவப்பு வண்ணங்களில் நல்லதைக் குறிக்கும் வாசகங்களையும் கொண்டு, வீடு, தெரு, மற்றும் கடைகளை அலங்கரித்துள்ளனர்.

சிவப்பு வண்ணம் நெருப்பை குறிக்கும். ஆதலால், குழந்தைகளுக்கு பரிசுகள் கூட சிவப்பு நிற உறையில் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த விழாவில், பாரம்பரிய நடனமான டிராகன் நடனம் மற்றும் வண்ண வானவெடி வேடிக்கையும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்தப் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி நவிலும் நாள், தமிழகத்தின் காணும் பொங்கல் பண்டிகையைப் போல இது குடும்பங்கள் ஒன்று சேரும் திருநாள் என்பதே.

வருடம் முழுதும் எங்கெங்கோ இருந்தாலும், சீன வருடப் பிறப்பின்போது குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்டு மகிழ்வது வழக்கம். இந்தத் திருநாளன்று எட்டு அல்லது ஒன்பது உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. எட்டு என்ற எண் - செல்வ செழிப்பையும், ஒன்பது என்ற எண் - நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.
நகரத்தில் வேலை பார்க்கும் மக்கள், சீன புத்தாண்டின்போது தம் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் வர்த்தகம் மற்றும் வணிக பரிமாற்றமும் பாதிக்கபடுகிறது.

இந்த விழா நேரத்தில், இந்தியாவின் தீபாவளியைப் போல், நாடே ஸ்தம்பித்து போகிறது. அரசாங்கமும் தனது விடுமுறை நாட்களை இந்த விழாவுக்கு ஏற்றார்போல் அறிவிக்கிறது.

சீனா மிக அதிகமாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதால், மற்ற நாடுகள் இதற்கேற்றார்போல் தம் வர்தக பரிமாற்றங்களை அனுசரித்துகொள்கின்றன.

இன்று உலகளவில் நாம் பிரமிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இந்நாட்டு மக்களின் உழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார ஒற்றுமைதான் நம் பிரமிப்புக்கு காரணம். சீனப் புத்தாண்டு, இந்த பழமையையும் கலாசார ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.
அனைவருக்கும் ஷின் நியான் குவாய்ல... அதாவது, சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

1 comment:

R.Gopi said...

ஷின் நியான் குவாய்ல

சீனப் புத்தாண்டு பற்றிய விளக்கம் அருமை...

சீனாவின் வளர்ச்சி உலகின் பல மேற்கத்திய நாடுகளுக்கு கடும் சவாலாகவே இருக்கிறது.....

உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் இருக்கும் நாடு விரைவில் முன்னேறும்.... இதற்கு ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல உதாரணம்.....