Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

4/29/2013

லாங்மென் கேவ்

மத்திய சீனாவின் ஹெனான் மாநிலத்தைச் சேர்ந்த புராதன நகரான லெவுயாங் நகரில் அமைந்துள்ள லாங்மன் கற்குகை சுமார் 1500 ஆண்டு கால வரலாறுடையது. லாங்மன் கற்குகை, லுயாங் புறநகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேரெதிர் நிலையில் மலைகள் உள்ளன. நடுவில் ஈவு ஆறு ஓடுகின்றது.
எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலமான இவ்விடம் மக்களுக்கு ஏற்ற பருவ நிலை கொண்டது. கிழக்கு மற்றும் மேற்கு மலைகளின் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கற்பாறையில் 2300க்கும் அதிகமான கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகளுக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தர் உருவச்சிலைகளைப் பண்டை காலச் சீனர்கள் செதுக்கினர். கி.பி.500ஆம் ஆண்டு காலப் பகுதியில், சீனாவின் பெய்வெய் வம்சக் காலத்து பேரரசர் புத்த மத நம்பிக்கையுடையவர். எவ்வளவு புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு புத்தரின் அருள் ஆசி கிடைக்கும் என்று நம்பினார்.

இதனால், அதிகமான புத்தர் சிலைகளைச் செதுக்க வேண்டும் அதனால் புத்தரின் ஆசி கிடைக்கும் என்று பெய்வெய் வம்ச காலப் பேரரசர் முடிவு செய்தார். லாங்மன் என்னும் இடத்தில் கற்பாறை தரமானதாகவும் சிலைகள் செதுக்க உகந்ததாகவும் இருந்ததால் 400க்கும் அதிகமான ஆண்டுகள் கால உழைப்பு மூலம் லாங்மன் குகைகளில் புத்த உருவங்கள் செதுக்கப்பட்டன. இக்கற்குகையிலுள்ள 90 விழுக்காட்டுக்கு மேலான சிறிய குகைகள் கி.பி.493 A.D. நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளாக பெய்வெய் வம்சக் காலத்திலும் தொடர்ந்து தாங் வம்சக் காலத்திலும் செதுக்கப்பட்டன. இங்கு குகைகளுக்கு நடுவில் இருக்கும் சாக்கியமுனி புத்தாவும் அருகில் போதிசத்துவர்களின் சிலைகளும் இருக்கிறது. மேல்புர கூரை தாமரை வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து பெரிய புத்தரின் சிலைகளும், பக்கத்தில் போதிசத்துவரின் சிலைகளும், இருக்கிறது. வடக்குவெய் வம்ச காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகியவை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்குவெய் வம்ச காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் சிறபக்கலையை ஆராய்வதற்கு இந்த தகவல்கள் உபயோகமாக உள்ளன.

லாங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளி நாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய வரலாற்று தகவல்களும் உள்ளன. இதனால், இது, பெரிய ரக மலை பாறைகளை குடைந்து கட்டப்பட்ட குகை கோவிலாகவும், அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது. உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லாங்மன் கற்குகை 2000ஆம் ஆண்டு நவம்பர் 30ந் நாள் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
லாங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் பிற்காலத்திலும் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலித்துள்ளன. இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கும் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.

No comments: