சில நல்ல நண்பர்களின்
செயல்களோ, அல்லது அவர்கள் நமக்கு செய்த உதவிகளோ என்றும் காலத்தை கடந்தும் நம்மை சுத்திகொண்டே
இருக்கும். அப்படி ஒரு நண்பர்..
அன்றொரு நாள் அப்பாவிடன்
நண்பர் சர்ச் பாதர் லூயிஸ் உங்க பெண் மேல்கலை படிப்பு படிக்க செல்லும் முன் என் சர்ச்சில்
நடக்கும் பள்ளியை பார்த்துக்கொள்ளலாமே என்றார், எனக்கும் குழந்தைகளோடு கும்மாளம் ரொம்ப
பிடிக்குமே அதனால் ஒத்துகொண்டேன். எல்லா குழந்தைகளுக்கும் ரொம்ப பிடித்திருந்தது என்
அணுகுமுறை. ஆனால் இன்னொரு ஆசிரியை ரொம்ப கண்டிப்பு, ஏதாவது எழுதவில்லை எனில் கைவிரல்
பழுத்து போகும்.. எனக்கு தான் பாவமாக இருக்கும்.
எல்லா குழந்தைகளும்
என் வகுப்புக்கே வரவேண்டும் என்று அடம்..இதெல்லாம் இன்று நினைத்தாலும் ரம்மியமாக இருக்கிறது.
அப்பொழுது பள்ளி ஆண்டுவிழா பாதர் நீங்களே வசூலித்து நடத்துங்கள் என்று சொல்லிவிட்டார்.
கஞ்சபிசினாரி பாதர், ஆனாலும் அப்பாவின் நண்பர் ஆயிற்றே. குழந்தைகள் ஒரே குதுகலத்துடன்
இந்த ஆண்டுவிழாக்கு நீங்க இருப்பீங்க இல்லை என்று கேட்டுகொண்டது வேறு, உடனே கண்டிப்பா
இருக்கேன் என்று உறுதி கூறினேன்.
எனது நண்பரும்
சரித்திர ஆசிரியருமான முருகானந்தம் , மருத்துவர்
விஜய்ராஜ், எல்லோரிடமும் வசூல் வேட்டை தொடங்கியது. அதை கணக்கெழுதி பரிசு பொருள்கள்
வாங்கி ஆண்டுவிழா செலவுக்கு வைத்திருந்தோம். அன்று கூட பணிபுரியும் ஆசிரியை வரவில்லை.
அதனால் மொத்த பணமும் என்னிடம் இருந்தது. பள்ளி விடும் மணியோசை கேட்டது. உடனே பிரேயர்
முடித்து பசங்களை வீட்டிற்கு விட கேட் திறந்து விடவேண்டும். 12.30 சாப்பிட்டு விட்டு
குழந்தைகள் தூங்கிவிடும். 1.30 எழுப்பி பாடம். 3.30 வீட்டுக்கு விட்டுவிடுவோம். கேட்
மூடியே இருக்கும். ஆயா பாட்டி பெல் அடித்த உடன் கேட் திறந்து விடுவார்கள். சிலர் தானே,
அல்லது பெற்றொர் வந்து அழைத்து செல்வார்கள். அப்போது கையில் வைத்திருக்கும் பணம் சர்ச்சில்
இயேசு கிறித்துவின் முன் இருக்கும் ஒரு மேடையில் வைத்து விட்டு பிரேயர் ஆரம்பித்து
விட்டேன். அங்கு மூன்று வழிகள் எந்த பகுதியிலும் இறங்கலாம். வாசல், வலது, இடது என மொத்தம்
மூன்று வழிகள் .குழந்தைகள் சென்றதும் சர்ச்சினுள் வந்து பார்த்தேன். பணம் காணவில்லை.
திக் என்றது. நானும், ஆயா பாட்டியும் தேடினோம். ஆயா பாட்டி ரொம்ப நல்லவர்கள். அவர்களை
சந்தேக படமுடியாது. ஒரே அழுகை. வீட்டில் வந்தால் ரொம்ப திட்டு கிடைக்கும். இன்னும்
4 நாள்களே இருந்தன விழாவிற்கு. வீட்டில் சொன்னேன். வசமாக திட்டு கிடைத்தது. கொஞ்சம்
கூட பொறுப்பேயில்லை என்று போலீஸ் ஸ்டேஷன் போவது அப்போது அந்த கிராமத்தில் அதுவும் பெண்கள்
போவது நினைத்து கூட பார்க்க இயலாது. அப்பா Block Development Officer. அதனால் மூன்று
வருடத்திற்கொரு முறை மாற்றம். ஆனாலும் என்ன செய்ய நான் தொடந்து போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்.
அப்போது தான் புது இன்ஸ்பெக்டர் மாணிக்கம் பொறுப்பேற்று 8 மாதங்கள் இருக்கும். திருடு,
ரவுடி எல்லாவற்றியும் ஒழித்து கட்ட துடிப்புடன் செயலாற்றி கொண்டிருந்தார். பள்ளி செல்லும்போது
அவர் பைக்கில் போகும் சத்தம் , சினிமா விட்டு சென்றால் அவர் பைக் செல்வது எல்லாம் காதில்
விழும். அப்படி எல்லோரையும் கண்காணிக்கிறாராம் என்று ஊரில் பேசிகொள்வார்கள்.நிஜமாகவே அப்போது
ஊரில் எந்த பிரச்சினையும் நடக்காமல் செமையா பார்த்துகொண்டார்.
நான், பாட்டி நேரே போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். இன்ஸ்பெக்டர்
இருந்தார். அப்போது என்ன பேசுவது என்று தெரியவில்ல. நேரே அவரிடன் சார் போலீஸ் ஸ்டேஷனில்
போனா பணம் எல்லாம் குடுக்கனும், வேலை ஒண்ணும் நடக்காது என்று சொல்கிறார்கள், என்னிடம்
பணம் இல்லை, உங்களுக்கு குடுக்க, ஆனால் எனக்கு உதவி வேணும் என்றேன். அவர் எனது பேச்சை
கேட்டு சிரித்து விட்டு என்னையும், பாட்டியையும் விசாரித்தார். சரி நான் விசாரித்து
சொல்கிறேன் என்றார். இன்னும் 4 நாள்கள் தான் இருக்கின்றன. என்ன செய்ய என்ற கவலை. எல்லோரையும்
கூப்பிட்டு இருந்தேன். அப்பா ஊரில் நியாயமான அதிகாரி என்று பேரெடுத்திருந்தார். என்னால்
ஏதாவது தவறு ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன்.
2 நாள் ஆனது. மாணிக்கம் இன்ஸ்பெக்டர்
கூப்பிட்டு விட்டிருந்தார். இந்தா உன் பணம் கிடைத்து விட்டது என்றார். என்னால் நம்பவே
முடியவில்லை. நிஜமாவா என்றேன். நிச்சயமா தான் நீ போய் விழா ஏற்பாடுகளை நடத்து, நானும்
விழாவிற்கு வருகிறேன் என்றார். வாவ் கடவுளே..உன் கருணையே கருணை..யாரோ ஒரு பையனின் அம்மா
எடுத்து சென்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் பணக்கார வீடு. அவர்களுக்கு அன்னிக்கு
என்ன ஆச்சு என்று தெரியவில்லை. பையனை அழைக்கும் சாக்கில் பர்சை எடுத்து தனது ஜாக்கெட்டில்
சொருகிவிட்டார். இதை இன்னொரு பக்கத்து ஊரில் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரியின் குட்டி
பையன் சொல்லிவிட்டான். அவன் எப்போதும்,பள்ளி வரும்போது அழுது கொண்டு வருவான். அவனை
தூக்கி கொண்டே இருக்க வேண்டும். அழுது அழுது தூங்கிவிடுவான். அவன் அம்மாவும் பள்ளி
ஆசிரியராக் இருந்தார். அதனால் அவர்கள் அவனை இங்கு கொண்டு விட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.
அவன் அம்மா, அப்பாவிடம் மிஸ் பாவம் அழுதுகிட்டு இருக்காங்க, ஆனால் மிஸ் பர்ஸை அந்த
முருகனோட அம்மா எடுத்து வச்சுகிட்டாங்க என்றிருக்கிறான்.
அவன் அப்பா இதை
கேட்டு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிருக்கார். உடனே மாணிக்கம் அந்த குழந்தை வீட்டிற்கே வந்து
வழக்கமாக் போலீஸ் எப்படி விசாரிக்கனுமோ அப்படி விசாரித்திருக்கிறார். 10 தடவை வேறு
மாதிரி கேட்டாலும் அவன் அதையே தான் சொல்லிகொண்டிருந்தான் அந்த குட்டி பையன். உடனே எடுத்தவர்களை
விசாரிக்க அவர்கள் ஒத்துகொள்ளவில்லை. ஆனால் எப்படியோ எல்லொருக்கும் பொதுவாக ஊர் பெரிய
மனிதர்களிடம் சொல்லி மாணிக்கம் பணத்தை வாங்கி என்னிடம் குடுத்துவிட்டார். இத்தனைக்கும்
நான் ஒரே தடவை தான் போனேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு. 2 நாளில் இதை கண்டுபிடித்து குடுத்து
விட்டார். விழாவுக்கு அவரும் வந்திருந்து மாணவர்களுக்கு பரிசும் அளித்தார். அதிலிருந்து
நானும், அவரும் ரொம்ப நண்பராகிவிட்டோம் அவர் மாற்றுதலாகும் வரை. இன்று அவர் எங்கு இருக்கிறாரோ
ஆனால் அவர் நினைவுகள் எப்போதும் என்னிடம்..