
மன்னன் கமய வம்சாவளி தோன்றலாய் இருந்தாலும் இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட காதலால் தனது பெயரை ஜய வர்மன் என சூட்டி கொண்டான். இவனுக்கு பின் வந்த மற்ற மன்னர்களும் இதையே பின் பற்றினர். இவர்கள் காலத்தில் இந்து மதமும் புத்த மதமும் வேறுபாடின்றி தழைத்தோங்கியது.
அங்கோர் வாட் பெரிய கோயிலை காக்கும் கடவுளான விஷ்ணுவை கொண்டு தன்னையும் விஷ்ணுவாக பாவித்து கொண்டு இந்த கோயிலை எழுப்பினான். நான்கு திசைகளில் வாயில்கள், ஒரு அகழி, மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் அங்கோர் வாட் கோவிலின் அமைப்பு. தூண்களின் மேல்புறம் தாமரை வடிவ அலங்காரங்களும், சுவர்களில் நடன மாதர்கள், ஆண்கள், அப்சரஸ், விலங்குகள் இவர்களின் உருவங்கள் காணபடுகிறது.
இரண்டாவது மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களும் மஹாபாரத காப்பியங்களும் காணபடுகிறது. வாலிவதம், காம தகனம், அமிர்தம் எடுத்தல், இவையும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர சுவர்களில் செதுக்கி அமைக்கபட்ட சிற்பங்கள் சொர்க்கம், நரகத்துக்க்கு செல்லும் பாதையை தெளிவாக விவரிக்கிறது.
நடைமுறையில் மக்கள் சட்ட திட்டங்களுக்கும், பழி பாவங்களுக்கும் கட்டுபட்டு நடக்க இந்த சிற்பங்கள் உதவியது. இவர்களது காலத்தில் நாடே செல்வ செழிப்புடன் காணப்பட்டது. இவர்களுக்கு பின் வந்த மன்னர்களின் ஆட்சியில் தொடங்கியது, ஆதிக்க வெறி.
இந்து மதத்தவர் புத்தர் சிலைகளையும் அதே போல் புத்த மதத்தவர் இந்து கடவுளின் சிலைகளையும் தாக்கி அழித்தனர். இயற்கை சீற்றங்களினால் அழிவு, பல்வேறு நாடுகளின் தாக்குதல், மற்றும் உள் நாட்டு போரினாலும் பல சிலைகளில் பாதிப்பு ஏற்பட்டன. இவ்வாறு படிப்படியாக இக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழ் அடைந்த நிலைக்கு தள்ளப்பட்டன.
இருபது ஆண்டகளாக நடைபெற்ற போரினால் அரசியல், நாட்டின் பண்பாடு, சமூகம் போன்ற அனைத்து துறைகளும் சிதைந்து காணப்பட்டது.
2000-ம் ஆண்டுலிருந்து கம்போடியாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. கம்போடிய நாட்டு மன்னனே நாட்டின் தலைவன். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கு ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, ஜெர்மனி, கனடா மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகள் பொருளாதார உதவி வழங்கின. உலக சுற்றுலா பயணிகளின் பார்வையை தன் பக்கம் இழுத்துக்கொண்டுள்ளது கம்போடியா.
அண்மையில் நான் சென்ற சமயம், பல்வேறு நாட்டினர் அங்கோர் வாட்டிற்க்கு சுற்றுலா வந்திருந்தனர். அங்கோர் வாட் சுற்றுலா வழிகாட்டி அவர்களின் பேச்சு வழக்கில் நமது புராண கதைகளை விவரிப்பது கொள்ளை அழகு. அங்கோர் வாட் கோவிலே கம்போடியாவின் சின்னமாக தேசிய கொடியிலும் இடம் பெற்றுள்ளது.
கம்போடியாவின் முன்னேற்ற பாதைக்கு அங்கோர் வாட் கோயிலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டென்பதில் சந்தேகமே இல்லை.